சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் நூற்றுக்கணக்கான வாக்காளர்களை திமுகவினர் கூடாரங்களில் அடைத்து வைத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், திமுக அரசு குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக தமாகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட தமிழக எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி, அதிமுகவினர் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக திமுகவினர் வாக்காளர்களைக் கூடாரங்களில் அடைத்து வைத்துள்ளதாகச் சாடினார்.
திமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டப்பிரிவு நிர்வாகி இன்பதுரை ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளையர் அணித் தலைவர் எம்.யுவாராஜா கூறுகையில், மாற்றுக் கட்சியினர் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக திமுகவினர் ஈரோட்டில் 120 இடங்களில் கொட்டகை அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
"தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளாத நாள்களில் காலை முதல் மாலை வரை வாக்காளர்களை அடைத்து வைக்கின்றனர். மேலும், பிரசாரம் என்ற பெயரில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.
"இதற்கென ஒவ்வொரு வாக்காளருக்கும் நாள்தோறும் ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது," என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட போது, காலை முதல் மாலை வரை அடைத்துவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் பலர் திமுகவினரால் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.
பல்வேறு பகுதிகளில் வீடுதோறும் இறைச்சி வழங்கப்படுவதாகவும் கோலம் போடவும் ஆரத்தி எடுக்கவும் பணம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள யுவராஜா, தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக தரப்பில் இடைத்தேர்தல் வெற்றிக்காக நூறு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்தான் தயாரித்துள்ளது என்றும் அதிமுகவினரைச் சந்திக்க அத்தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தை மீறி வாக்காளர் பட்டியலில் எவ்வாறு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் எனத் தெரிந்ததும், தோல்விக்கான காரணங்களை அதிமுகவினர் இப்போதே பட்டியலிடத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

