சென்னை: தமிழகத்தில் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது என்றும் இன்றோ, தமிழ் எங்கே என்று கேட்கும் நிலை உருவாகி உள்ளது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'தமிழைத்தேடி' என்ற தலைப்பில் தாம் பரப்புரை பயணம் ஒன்றை மேற்கொள்வதாகவும் அவர் அறிக்கை வழி குறிப்பிட்டுள்ளார்.
கோவில்கள், உயர் நீதிமன்றம், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், வீடுகளில் தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்கள் என எங்கும் தமிழ் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும் நோக்கமாகவும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்.
"அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும், பள்ளிகளில் தொடங்கி கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.
"இதை முன்வைத்து வருகிற 21ஆம் தேதி உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத்தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

