ஐஸ்கிரீம்: வாடிக்கையாளருக்கு ரூ.5,000 வழங்க உணவகத்துக்கு உத்தரவு
நெல்லை: தாம் விரும்பாத ஐஸ்கிரீமை சாப்பிட வைத்த காரணத்தால் வாடிக்கையாளருக்கு உணவக நிர்வாகம் ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு தர வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த 23 வயதான பேச்சிமுத்து ராஜா என்பவர் தனது நண்பருடன் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாளையங்கோட்டையில் உள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு தமக்குப் பிடித்தமான ஐஸ்கிரீம் வேண்டும் என்று அவர் கூறிய நிலையில், உணவக ஊழியர் வேறு ஐஸ்கிரீமை அளித்துள்ளார். அதனால் வேறு வழியின்றி அதைச் சாப்பிட்டு, பணம் செலுத்திய பேச்சிமுத்து ராஜா, தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகம் மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.
நான்கு நிறுவனங்களில் வருமான வரித்துறை இரு நாள்கள் சோதனை
சென்னை: நான்கு நிறுவனங்களைக் குறிவைத்து வருமானவரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கையால் சென்னையில் பரபரப்பு நிலவியது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்கள், நிர்வாகிகளின் வீடுகள், தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கோவை, வேலூர், கன்னியாகுமரி. திருநெல்வேலி மாவட்டங்களிலும் புதுவையிலும் உள்ள இடங்களில் மூன்று நாள்களாக இந்தச் சோதனை நீடித்தது. இச்சமயம் 7.5 கிலோ தங்கம், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம்'
தி.மலை: திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் மையங்க ளில் கொள்ளையடித்த கும்பல் விமானத்தில் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த அந்த கும்பலில் இருந்த பத்து பேரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. "கொள்ளையடித்த பின்னர் பெங்களூரு சென்ற அந்தக் கும்பல், பின்னர் அங்கிருந்து ஹரியானா சென்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பத்து பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்," என திருவண்ணாமலை ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு நூறாயிரம் மனுக்கள் அனுப்ப பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு
சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் நூறாயிரம் மனுக்களை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார், 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை முக்கியத்துவம் கொடுத்து அரசு கொள்கை முடிவெடுத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக என ஆறு கட்சிகள் சார்பில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

