ஓசூர்: கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியான சம்பவம் இரு மாநில எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் காவிரியும் பாலாறும் கலக்கின்றன. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்தாலும், கர்நாடக வனத்துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையும் தமிழக மீனவர்கள் வழக்கம்போல் பரிசல்களில் சென்று பாலாற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர்.
இந்நிலையில், ராஜா என்ற மீனவரை மட்டும் காணவில்லை. கரை திரும்பாத நிலையில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து மீனவர் ராஜாவின் உடல் பாலாற்றில் தேடப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதனால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்ட பல்வேறு மீனவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இரு மாநில எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டும் உரிய அனுமதியின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாகக்கூறி கர்நாடக வனத்துறை தாக்குதல் நடத்தியது. அப்போதும் ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.
அச்சமயம் இரு மாநில எல்லையில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மேலும் ஒரு தமிழக மீனவர் கொல்லப்பட்டுள்ளார்.
மீனவர்கள் சட்டவிரோதமாக பாலாறு வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீனவர்கள் இதை மறுத்துள்ளனர். எல்லையில் பதற்றம் நிலவி வருவதையடுத்து கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

