சென்னை: கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியான சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றால் இலங்கை கடற்படையினராலும் காட்டுக்குச் சென்றால் கர்நாடக வனத்துறையினராலும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாவதை அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் மீது கர்நாடக வனத்துறை இரக்கமற்று, தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சட்டத்தை மீறிய செயல் என்றும் எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் அமமுகவின் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

