செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மேலும் 25 நகரங்களில் காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையங்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 நகரங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மக்கள் தொகை, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் ஏற்கெனவே 34 காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

எட்டு கோவில் சிலைகள் உடைப்பு

பெரம்பலூர்: கோவிலில் இருந்த எட்டு சிலைகள் உடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இங்குள்ள நாராணமங்கலம் கிராமத்தில் இருக்கும் அய்யனார் கோவி லில் மே மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலை யில், சிலை உடைப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு இக்கிராமத்துக்கு அருகே உள்ள சிறுவாச்சூரிலும் இதேபோன்ற சிலை உடைப்புச் சம்பவம் நடந்தது.

மது அருந்தி, பிரியாணி சாப்பிட்டு தூங்கிய திருடன் பிடிபட்டான்

சிவகங்கை: திருடச் சென்ற இடத்தில் மது அருந்தி, பிரியாணியும் சாப்பிட்ட திருடன் அயர்ந்து தூங்கியதால் பிடிபட்டான். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையில் வசிக்கும் வெங்கடேசன் அண்மையில் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒரு திருடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் மூட்டை கட்டியுள்ளான். பின்னர் கையோடு கொண்டு சென்றிருந்த மதுப்புட்டியைத் திறந்து அதிலிருந்த மதுவை காலி செய்த அத்திருடன், பிறகு கைவசம் இருந்த பிரியாணியையும் ஒருபிடி பிடித்துள்ளான். அதன் பிறகே வேடிக்கை அரங்கேறியது. மதுபோதை, உண்ட மயக்கம் காரணமாக வீட்டில் இருந்த மெத்தையில் சிறிது நேரம் படுத்துறங்கி ஓய்வெடுக்க நினைத்த திருடன், நீண்ட நேரம் தூங்கிவிட்டான். மறுநாள் காலை வீடு திரும்பிய வெங்கடேசன், வீட்டுக்குள் யாரோ நுழைந்துவிட்டதைக் கண்டுபிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரி வித்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள், திருடனை தட்டியெழுப்பி கைது செய்தனர்.