சென்னை: அண்மையில் திருவண்ணாமலையில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவர் உள்ளிட்ட இருவரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரியானா மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களைச் சூறையாடிய கும்பல், திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தது.
இதையடுத்து, கொள்ளைக் கும்பலைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
தீவிர விசாரணைக்குப் பின்னர் பத்து பேர் கைதான நிலையில், இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட கொள்ளைக் கும்பலின் தலைவன் முகமது ஆரீஃப் (35), அவனது கூட்டாளியான ஆசாஜ் (37) ஆகிய இருவரையும் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வனப்பகுதி நிறைந்த மேவாட் மாவட்டத்தில் ஏராளமான குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோர் காவல்துறையின் நெருக்கடி அதிகமாகும்போது இந்த வனப்பகுதிகளில் பதுங்குவது வழக்கமாக உள்ளது.
தங்களைத் தேடி வரும் காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆபத்தை எதிர்கொண்டு குற்றவாளிகளைத் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான முகமது ஆரீஃப், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் சில மாதங்கள் பணியாற்றி, இயந்திரத்தின் தொழில்நுட்பம் குறித்து நன்கு தெரிந்துகொண்டுள்ளார். அதன் பிறகே கொள்ளையடித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தனது கைவரிசையைக் காட்டும் முன்பே நான்கு மாநிலங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் முகமது ஆரீஃப் கும்பல் கொள்ளையடித்துள்ளது. எனவே, அம்மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

