சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் பக்தர்களுக்கு அப்பம் சுட்டுத் தந்த பாட்டி
விருதுநகர்: சிவராத்திரியை ஒட்டி திருவில்லிப்புத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் முத்தம்மாள் என்ற 90 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையை விட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார். இக்கோவிலில் கடந்த நூறாண்டுகளாக இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இவ்வாறு அப்பம் சுட்டு வழங்கி வரும் மூதாட்டி முத்தம்மாள் இதற்காக நாற்பது நாள்கள் விரதம் மேற்கொள்கிறார்.
அவதூறு: பாஜக கவுன்சிலர் கைது
குமரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் கன்னியா குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் கைதாகி உள்ளார். 32 வயதான அவர் பாஜக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஆவார். அவர் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசும் காணொளிப் பதிவு ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளி யானது. இதையடுத்து திமுக வழக்கறிஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு சுபாஷை கைது செய்தது.
உயர் ரக மிதிவண்டிகளைக் குறிவைத்து திருடிச் செல்லும் கும்பல்
திண்டுக்கல்: கடந்த சில வாரங்களாக பழனி பகுதியில் உயர் ரக மிதிவண்டிகளை ஒரு கும்பல் திருடி வருகிறது. பட்டப்பகலில் வீடு புகுந்து மிதிவண்டிகளைத் திருடிச் செல்வது குறித்து பொதுமக்கள் காவல்துறையில் புகார்களை அளித்து வருகின்றனர். சுமார் ஐந்தாயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மதிப்புள்ள மிதி வண்டிகளை திருட்டுக் கும்பல் திருடிச் செல்வதாகவும் சில பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. மிதிவண்டிகளைத் திருடிச் செல்வதும் வெளிச்சந்தையில் அவற்றை விற்பதும் எளிதாக இருப்பதால் திருடர்கள் அவற்றைக் குறி வைப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்
தஞ்சாவூர்: திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார். அவருக்கு வயது 83. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்த அவர், நான்கு முறை தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2006 முதல் 2011 வரை தமிழக வணிக வரித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர், திமுக மாநில வர்த்தக அணித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நேற்று உபயதுல்லாவின் பேரனுக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். அவரது திடீர் மறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு திமுகவினர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

