ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக மீண்டும் புகார் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் நாள்தோறும் வசூலாகும் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடி உள்ளார்.
இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகளில் நாள்தோறும் விற்பனையாகும் மது மூலம் கிடைக்கும் தொகை அந்தத் துறையின் அமைச்சர் சொல்லும் ஒருவரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றார்.
"அந்தப் பணத்தை ஆளும் தரப்பினர் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்துவதாக நாங்கள் அறிகிறோம். இதேபோல் வெளி இடங்களில் இருந்தும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள் பணம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தொகைகளை அரசாங்க வருவாய் என்று சித்திரிப்பதற்காக, அரசு வங்கிக்கணக்கில் வரவு வைக்கின்றனர்," என்றார் ஜெயக்குமார்.
இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கப் பணத்தை ஓர் அரசியல் கட்சியானது தனது தேர்தல் லாபத்துக்காகப் பயன்படுத்துவதை ஏற்க இயலாது என்றார்.
ஏற்கெனவே ஈரோடு கிழக்குத் தொகுதியில் 111 இடங்களில் ஆளும் தரப்பினர் கொட்டகைகள் அமைத்து வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்குச் செல்லவிடாமல் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
"இந்நிலையில் அரசாங்கப் பணத்தையும்கூட தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம் எனும் புதிய, முறைகேடான வழியை கண்டறிந்துள்ளனர்.
"எனவே தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூலாகும் பணம் அன்றைய தினமே அரசுக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்," என்றார் ஜெயக்குமார்.
இந்தக் குற்றச்சாட்டை திமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
பல்வேறு புகார்களை எழுப்பும் அதிமுகவினர் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

