கோவை: உடல் உறுப்பு தானம் மூலம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளையர் ஒருவரது தோல் தானமாகப் பெறப்பட்டுள்ளது. தீக்காயங்கள், பிற நோய்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக தோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காத்திருப்பவர்களுக்கு இளையரின் தோல் தானமாக வழங்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்த 31 வயதான நாகராஜ் என்பவர் அண்மையில் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதையடுத்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க நாகராஜின் தாயார் முன்வந்தார். இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நிர்வாகம் செய்தது. அப்போது, நாகராஜின் தோல் தானமாக வழங்கப்பட்டால், தோல் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பலன் அடைவர் என அவரது தாயாரிடம் விரிவாக விளக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜின் தாயார் இதற்கு சம்மதித்தார்.
மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் முதன் முறையாக தோல் தானமாகப் பெறப்பட்டுள்ளது. கோவையில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் நாகராஜின் தோல் பகுதியையும் உடல் உறுப்புகளையும் பாதுகாப்பாக அகற்றினர்.
அந்த உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு அவை பொருத்தப்படும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நாகராஜின் தாயாருக்கு மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.