ராமநாதபுரம்: பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் சேயும் விபத்தில் பலியான சம்பவம் ராமேசுவரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுமதி கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, தனது கணவர் சின்ன அடைக்கான், தாயார் காளியம்மாள் ஆகியோருடன் ஆட்டோவில் வீடு திரும்பினார்.
அந்த ஆட்டோ மதுரை, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த கார் ஒன்று பெரும் வேகத்தில் மோதியது. இதில் அந்த ஆட்டோ நொறுங்கியதில், சுமதியும் ஆட்டோ ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிறந்து மூன்று நாள்களே ஆன சுமதியின் பச்சிளங் குழந்தையும் கணவர் சின்ன அடைக்கானும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் கைதாகி உள்ளார்.

