திருச்சி: பயங்கர ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற இரு ரவுடிகளைத் துப்பாக்கிச்சூடு நடத்தி காவலர்கள் வளைத்துப் பிடித்தனர்.
திருச்சி மாவட்டம், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதான துரைசாமியும் 27 வயதான சோமசுந்தரமும் பல்வேறு குற்றச்செயல்களைப் புரிந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இருவர் மீதும் ஐந்து கொலை வழக்குகளும் ஆள் கடத்தல், கொள்ளை, கஞ்சா விற்பனை தொடர்பாக 64 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகள் உள்ளதாகவும் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இவர்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின்போது பல்வேறு கொள்ளைச் சம்பவங்களின்போது தாங்கள் கொள்ளையடித்த நகைகள், ரொக்கப் பணம், ஆயுதங்களை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக இருவரும் கூறியதை அடுத்து, காவல்துறையினர் அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர்.
காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இரு ரவுடிகளும் திடீரென காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் வாகன ஓட்டுநர் நிலைகுலைந்துபோக, அந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இருவரும் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில், மூன்று காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ரவுடிகளை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார் ஆய்வாளர் மோகன்.
அதன் பிறகும் ரவுடிகள் இருவரும் தாக்குதலைத் தொடர்ந்ததால் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஆய்வாளர். இதில் ரவுடிகளின் கால்களில் குண்டு பாய்ந்தது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, காவலர்களைத் தாக்க நினைப்பவர்களுக்கு திருச்சி துப்பாக்கிச்சூடு ஒரு பாடம் என திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

