கைதான ஆசிரம ஊழியர்கள் ஏழு
பேரும் அங்கு சிகிச்சை பெற்றவர்கள்
விழுப்புரம்: ஆனந்த ஜோதி ஆசிரம முறைகேடுகள் தொடர்பாக கைதாகி உள்ள ஏழு ஊழியர்களும் அங்கு சிகிச்சை பெற்றவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. ஏழு பேரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததும் ஆசிரமத்திலேயே பணியாளர்களாக நியமிக்கப்பட்டு மாதச் சம்பளமும் பெற்று வந்துள்ளனர். ஏழு பேரையும் வெளியே எங்கும் அனுப்பாமல் ஆசிரமத்திலேயே தங்க வைத்துள்ளனர். மேலும், ஆசிரமத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் துணையாக இருந்துள்ளனர். இதையடுத்து ஏழு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளையர் கைது
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளையர் கைதானார். நேற்று முன்தினம் அந்த விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஹைதராபாத் விமான நிலையத்துக்கு தொலைபேசி வழி மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய நிர்வாகம், சூழ்நிலையை எதிர்கொள்ள முழு வீச்சில் ஏற்பாடுகளைச் செய்தது. விமானம் தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது. தெலுங்கானாவைச் சேர்ந்த இளையர் ஒருவர், சென்னை செல்லவேண்டிய விமானத்தை தவறவிட்ட கோபத்தில் இவ்வாறு மிரட்டல் விடுத்தது உறுதியானது. அவர் கைது செய்யப்பட்டார்.
புதை மணலில் சிக்கி சிறுமிகள் பலி
தஞ்சாவூர்: ஆடு மேய்க்கச் சென்ற இரு சிறுமிகள் புதை மணலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நிகழ்ந்துள் ளது. நேற்று முன்தினம் 14 மற்றும் 16 வயதுடைய அச்சிறுமி கள் மேய்ச்சலுக்காக சில ஆடுகளை குடமுருட்டி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ஆடுகள் கரையோரம் மேய்ந்து கொண்டு இருந்த நிலையில் சிறுமிகள் இரண்டு பேரும் குடமுருட்டி ஆற்றில் விளையாடியதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் புதை மணலில் சிக்கி, மூழ்கி இறந்தனர்.
அதானி குழும விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்து
திருவள்ளூர்: அதானி குழும மோசடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான பிரகாஷ் காரத் வலியுறுத்தி உள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டு, பங்குச் சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். "இந்த மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் வெளிவரும்," என்றார் பிரகாஷ் காரத்.
'தமிழை தேடி' பிரசார பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்
திருவள்ளூர்: முன்பே அறிவித்தபடி 'தமிழை தேடி' என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தாம் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பிரசாரப் பயணத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அப்போது ராமதாஸ் எழுதிய 'எங்கே தமிழ்' என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்தப் பயணம் எட்டு நாள்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் ஏழு பேரை விடுவித்தது இலங்கை கடற்படை
நாகை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் ஏழு பேரும் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. அண்மையில் இலங்கையின் நெடுந்தீவு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மீனவர்களின் படகை சோதனையிட்டபோது மீன்கள் ஏதும் சிக்கவில்லை. எனவே வெறும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

