சென்னை: புதிய கிருமிக் காய்ச்சலால் சென்னையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. ஏராளமானோர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது சுவாச ஒத்திசைவு கிருமி (ஆர்.எஸ்.வி), அடினோ கிருமி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழக்கமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த சில நாள்களாக புதிய கிருமிக் காய்ச்சல் பரவி வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மர்ம கிருமி பாதிப்புக்கு ஆளாகும் ஒருவருக்கு தொடர்ந்து 48 மணிநேரம் காய்ச்சல் குறையவில்லை எனில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரியான மருத்துவர் ம.ஜெகதீசன் கூறுகிறார்.
"சில நோயாளிகளுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி ஏற்படக்கூடும். எனவே, உரிய பரிசோதனை களைச் செய்துகொள்ள வேண்டும்.
"டிசம்பர், ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
"எனினும், இதர கிருமி பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. புதிய கிருமிப் பாதிப்பு மற்ற இடங்களுக்குப் பரவி வருகிறது," என்று மருத்துவர் ம.ஜெகதீசன் கூறுகிறார்.
காய்ச்சல் அறிகுறிகள் குறைந்த பின்னர் பலருக்கு பத்து நாள்கள் இருமல் நீடிக்கக்கூடும் என்றும் பெரும்பாலானோர் சுமார் ஒரு வார காலம் சோர்வாக உணர்வர் என்றும் அவர் தெரிவித்தார்.
மருந்தகங்களில் மருத்துவர் அறிவுரையின்றி மருந்துகளைப் பெறுவது கூடாது என்றும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
எனினும் கடந்த சில நாள்களாக கொசுத்தொல்லை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.