கடலூர்: வறுமையில் வாடும் குழந்தைகளை கணிசமான தொகைக்கு வாங்கி வெளியே விற்பனை செய்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பலை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை நான்கு குழந்தைகளை இந்தக் கும்பல் விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் சித்தா மருத்துவ சிகிச்சையகம் நடத்தி வருபவர் மெஹர்னிசா. 67 வயதான இவர் தம்மை சித்த மருத்துவர் எனக்கூறி வந்துள்ளார்.
மருத்துவர் என்ற போர்வையில் இவர் குழந்தை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகி உள்ளது.
அவரது ஏற்பாட்டில் நான்கு பேர்கொண்ட கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
குடும்ப வறுமை, சூழ்நிலை காரணமாக பெற்றெடுத்த குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் தம்பதியரை அணுகி, மூளைச் சலவை செய்து, அவர்களிடம் இருந்து குழந்தைகளைப் பெற்றுள்ளார் மெஹர்னிசா. இதற்காக ஒரு தொகையையும் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், வடலூரைச் சேர்ந்த சுடர்விழி (வயது 37) என்ற பெண்மணி சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றை வைத்துள்ளதாக கடலூர் மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு ஒரு தகவல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டார்.
விசாரணையில், அந்த குழந்தையின் உண்மையான தாய் அல்ல என்பதும், அவர் மெஹர்னிசாவிடம் இருந்து ரூ.3.5 லட்சத்துக்கு அக்குழந்தையை வாங்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தை விற்பனைக் கும்பல் காவல்துறை யிடம் சிக்கியது. அவர்களிடம் கடலூர் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.