எக்காலமும் ஒலிக்கும் என் எக்காளம்

எக்காலமும் ஒலிக்கும் என் எக்காளம்

4 mins read
225a069c-98c4-462e-85a4-973a33ae4166
-

சனிக்கிழமை

ஒரு சாமானியர்

எக்காளம், வாங்கா, உடல், திருச்சின்னம், நமரி ஆகிய பஞ்ச வாத்தியங்களையும் வாசிக்கும் எங்கள் ஆறு பேர் குழுவில் நானும் எனது எக்காளமும்தான் பாக்கி. நான் போனாலும் என் எக்காளம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார் கலியபெருமாள், 82.

செய்தி &

படங்கள்:

எம். கே. ருஷ்யேந்திரன்

தமி­ழர்­க­ளின் இசைக் கரு­வி­களில் ராஜ­கம்­பீரமாக ஒலிப்­பது எக்­கா­ளம்.

பஞ்ச வாத்­தி­யங்­கள் என்று வர்­ணிக்­கப்­படும் நமரி, உடல், திருச்­சின்­னம், வாங்கா, எக்­காளம் ஆகிய ஐந்­தும் சேர்ந்து ஒலிக்­கும்­போது வர்­ணிக்க இயலாத அள­வுக்கு ஓர் உணர்வு ஏற்­படும் என்று சொல்வார்கள்.

மன்னர்­கள் காலத்­தில் வெற்றி ஒலி­யாக, பிறகு கோயில் விழா, திரு­ம­ணம், புது­மனைப் புகு­விழா போன்ற நிகழ்ச்சிகளில் மங்­கல ஒலியாக எக்­கா­ளம் அங்கீகரிக்கப்படுகிறது.

இந்­தப் பஞ்ச வாத்­தி­யக் கலை­ஞர்­கள், வர­லாற்­றுச் சிறப்புமிக்க பூம்­பு­காருக்கு அருகே உள்ள ஊர்­களில் முன்பு அதி­கம் வாழ்ந்தார்கள். இப்­போது எல்­லாம் பழைய கதை­யா­கி­விட்­டது.

''பூம்­பு­கார் அருகே உள்ள மேலப்­பெ­ரும்­பள்­ளம் கிரா­மம்­தான் எங்­கள் பூர்­வீ­கம்," என்றார் திரு கலியபெருமாள் என்ற 82 வயது எக்காளக் கலைஞர்.

"நாங்­கள் ஆறு­பேர் குழு­வாக வாசிப்­போம். நமரி வாசிக்க இருவர் இருப்­பார்­கள். உடல், திருச்­சின்­னம், வாங்கா, எக்­கா­ளம் ஆகியவற்றைத் தலா ஒருவராக மற்­ற­வர்­கள் வாசிப்போம். உடல் ஒன்­று­தான், மேளம் போன்ற தோல் கருவி. மற்றவை எல்­லாம் காற்று இசைக் கரு­வி­கள்.

''என் குழு­வில் இருந்­த­வர்­ எல்­லாரும் மர­ண­ம­டைந்­து­விட்­டார்­கள். அவர்­க­ளின் இசைக் கருவி­ க­ளின் கதி­யும் தெரி­ய­வில்லை. நான் மட்­டும்­தான் என் எக்­காள ஒலியை எழுப்பி வருகிறேன்.

''முன்பு திருச்சி, கட­லூர் போன்ற ஊர்­க­ளுக்­கும் சென்று வாசிப்­பேன். உள்­ளூ­ர் என்­றால் ரூ.1,500 வாங்குவேன். வெளி­யூர் எனில் ரூ.2,000 கேட்­பேன்.

"இப்­போது வய­தா­கி­விட்­டது. கடந்த மூன்றாண்டுகளாக முடி­ய­வில்லை. உள்­ளூ­ரி­லேயே திரு­மணம், கோயில் விழா, புது­மனைப் புகு­விழா போன்ற நிகழ்ச்­சி­களில் கூப்­பிட்­டால் போய் வாசிப்­பேன்.

''எப்படியோ சிரமப்பட்டு மாதம் சரா­ச­ரி­யாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்­பா­திக்­கி­றேன்.

''நோக்­கர் என்ற பாரம்­பரியத்தைச் சேர்ந்த நாங்­கள் வழி­வழி­யாக எக்­கா­ளம் வாசித்து வருகி­றோம். என் தாத்தா திரு பழனி, என் தந்தை திரு மாரிமுத்து, பிறகு நான் என்று பரம்­பரை பரம்­ப­ரை­யாக எக்­கா­ளம் வாசித்து வருகிறோம்.

"என்­னி­டம் இப்­போ­துள்ள எக்­கா­ளத்­திற்கு வயது 100க்கு மேல் இருக்­கும். 'தாத்தா, பிறகு தந்தை இப்­போது நான் என மூன்று தலை­முறை­க­ளாக எங்கள் எக்காளம் கம்­பீர ஒலியை எழுப்­பிக்கொண்டே இருக்­கிறது.

"எனக்கு ஆறு மகள்­கள், ஒரே பையன். ஒரு பெண்­ணைத் தவிர மற்றவர்கள் மண­மாகி வாழ்­கி­றார்­கள். இருந்­தா­லும் எனக்­குப் பிறகு ஒரு­வர்­கூட எங்கள் குடும்­பத்­தில் இந்­தப் பாரம்­ப­ரி­யத்தைத் தொடரப் போவ­தில்லை. என் தலை­முறை­தான் கடை­சி­ என்றாகிவிட்டது.

''எக்­கா­ளம் சுமார் 4 கிலோ எடையுடன் ஆறடி உய­ரம் இருக்­கும். பொது­வாக நான்கு பகு­தி­களாக எக்­கா­ளம் செய்­யப்­படும். ஆனால், எங்­கள் குடும்ப எக்­கா­ளத்­தில் இரண்டு பகு­தி­தான் உண்டு. அவற்றைக் கழற்றி மீண்­டும் பொருத்­திக்­கொள்­ள­லாம்.

''எக்­கா­ளம் இரண்டு சுவர் களைக் கொண்­டி­ருக்­கும். உள் சுவர் தாமி­ரத்­தால் ஆனது. வெளிச் சுவர் வெண்­க­லத்­தால் செய்யப்பட்டு இருக்கும்.

"நடுவே அரக்­கைக் காய்ச்சி ஊற்­றி­வி­டு­வார்­கள். அது கெட்­டி­யாகப் பிடித்­துக்­கொள்­ளும். வாயை வைத்து ஊதும்­போது உதட்டுக்கு எது­வும் நேரா­த­படி அந்தப் பகுதியை அரக்கை வைத்து வடி வமைத்து இருப்­பார்­கள். ஊதும் பகுதியின் உள்ளே ஓர் அங்குல உய­ரத்­துக்கு 'நாகா' என்ற ஒன்று இருக்­கும்.

"நாதஸ்வரத்தில் இருக்கும் சீவாளி அல்­லது நறுக்கைப் போன்றது நாகா. ஆனால் நாகாவை மாற்ற முடியாது. அது­தான் ஒலியை ஏற்­ப­டுத்­தும்.

''கூம்பு போல் விரிந்த முனை யைக் கொண்ட எக்­கா­ளத்­தின் இரண்­டா­வது பகுதி இரண்டு, மூன்று கிலோ­மீட்­டர் தொலைவுக்­கும் அப்­பால் கேட்கும்படி ஒலியை கம்பீரமாக ஒலிக்கச் செய்­யும்.

''இப்­போது கும்­ப­கோ­ணத்­திற்கு அருகே உள்ள நாச்­சி­யார்­கோ­யி­லில் ஒரு சிலர் ரூ.15,000 விலை­யில் எக்­கா­ளம் தயா­ரித்துக் கொடுக்­கி­றார்­கள். எக்­கா­ளம் என்பது அது அமை­வ­தைப் பொறுத்து­தான் இருக்­கிறது.

''தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரியத்தில் எக்­கா­ளத்­திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதைப்போல ராஜகம்­பீ­ர­ ஒலியை வேறு எந்தக் கரு­வி­யும் ஏற்­படுத்­தாது. எனது முக்­கா­ல­மும் எக்­கா­ல­மும் எக்­காளத்­தோடு­தான் நகர்கிறது.

''என் உயிர்மூச்சு பிரியும் வரை என் எக்காளம் ஒலிக்கும். நான் மறைந்தாலும் எனது எக்காள ஒலி எங்கேயாவது எதிரொலித்துக் கொண்டே இருக்கும்,'' என்று திரு கலியபெருமாள் கூறினார்.

எக்­கா­ளத்தை ஊதிக் காட்டி னார். அதன் கம்­பீர ஒலி­யைக் கேட்டு என் ஐம்­பொ­றி­களும் அதிர்ந்­தன.