சனிக்கிழமை
ஒரு சாமானியர்
எக்காளம், வாங்கா, உடல், திருச்சின்னம், நமரி ஆகிய பஞ்ச வாத்தியங்களையும் வாசிக்கும் எங்கள் ஆறு பேர் குழுவில் நானும் எனது எக்காளமும்தான் பாக்கி. நான் போனாலும் என் எக்காளம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார் கலியபெருமாள், 82.
செய்தி &
படங்கள்:
எம். கே. ருஷ்யேந்திரன்
தமிழர்களின் இசைக் கருவிகளில் ராஜகம்பீரமாக ஒலிப்பது எக்காளம்.
பஞ்ச வாத்தியங்கள் என்று வர்ணிக்கப்படும் நமரி, உடல், திருச்சின்னம், வாங்கா, எக்காளம் ஆகிய ஐந்தும் சேர்ந்து ஒலிக்கும்போது வர்ணிக்க இயலாத அளவுக்கு ஓர் உணர்வு ஏற்படும் என்று சொல்வார்கள்.
மன்னர்கள் காலத்தில் வெற்றி ஒலியாக, பிறகு கோயில் விழா, திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் மங்கல ஒலியாக எக்காளம் அங்கீகரிக்கப்படுகிறது.
இந்தப் பஞ்ச வாத்தியக் கலைஞர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகாருக்கு அருகே உள்ள ஊர்களில் முன்பு அதிகம் வாழ்ந்தார்கள். இப்போது எல்லாம் பழைய கதையாகிவிட்டது.
''பூம்புகார் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம் கிராமம்தான் எங்கள் பூர்வீகம்," என்றார் திரு கலியபெருமாள் என்ற 82 வயது எக்காளக் கலைஞர்.
"நாங்கள் ஆறுபேர் குழுவாக வாசிப்போம். நமரி வாசிக்க இருவர் இருப்பார்கள். உடல், திருச்சின்னம், வாங்கா, எக்காளம் ஆகியவற்றைத் தலா ஒருவராக மற்றவர்கள் வாசிப்போம். உடல் ஒன்றுதான், மேளம் போன்ற தோல் கருவி. மற்றவை எல்லாம் காற்று இசைக் கருவிகள்.
''என் குழுவில் இருந்தவர் எல்லாரும் மரணமடைந்துவிட்டார்கள். அவர்களின் இசைக் கருவி களின் கதியும் தெரியவில்லை. நான் மட்டும்தான் என் எக்காள ஒலியை எழுப்பி வருகிறேன்.
''முன்பு திருச்சி, கடலூர் போன்ற ஊர்களுக்கும் சென்று வாசிப்பேன். உள்ளூர் என்றால் ரூ.1,500 வாங்குவேன். வெளியூர் எனில் ரூ.2,000 கேட்பேன்.
"இப்போது வயதாகிவிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக முடியவில்லை. உள்ளூரிலேயே திருமணம், கோயில் விழா, புதுமனைப் புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கூப்பிட்டால் போய் வாசிப்பேன்.
''எப்படியோ சிரமப்பட்டு மாதம் சராசரியாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறேன்.
''நோக்கர் என்ற பாரம்பரியத்தைச் சேர்ந்த நாங்கள் வழிவழியாக எக்காளம் வாசித்து வருகிறோம். என் தாத்தா திரு பழனி, என் தந்தை திரு மாரிமுத்து, பிறகு நான் என்று பரம்பரை பரம்பரையாக எக்காளம் வாசித்து வருகிறோம்.
"என்னிடம் இப்போதுள்ள எக்காளத்திற்கு வயது 100க்கு மேல் இருக்கும். 'தாத்தா, பிறகு தந்தை இப்போது நான் என மூன்று தலைமுறைகளாக எங்கள் எக்காளம் கம்பீர ஒலியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
"எனக்கு ஆறு மகள்கள், ஒரே பையன். ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்கள் மணமாகி வாழ்கிறார்கள். இருந்தாலும் எனக்குப் பிறகு ஒருவர்கூட எங்கள் குடும்பத்தில் இந்தப் பாரம்பரியத்தைத் தொடரப் போவதில்லை. என் தலைமுறைதான் கடைசி என்றாகிவிட்டது.
''எக்காளம் சுமார் 4 கிலோ எடையுடன் ஆறடி உயரம் இருக்கும். பொதுவாக நான்கு பகுதிகளாக எக்காளம் செய்யப்படும். ஆனால், எங்கள் குடும்ப எக்காளத்தில் இரண்டு பகுதிதான் உண்டு. அவற்றைக் கழற்றி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.
''எக்காளம் இரண்டு சுவர் களைக் கொண்டிருக்கும். உள் சுவர் தாமிரத்தால் ஆனது. வெளிச் சுவர் வெண்கலத்தால் செய்யப்பட்டு இருக்கும்.
"நடுவே அரக்கைக் காய்ச்சி ஊற்றிவிடுவார்கள். அது கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். வாயை வைத்து ஊதும்போது உதட்டுக்கு எதுவும் நேராதபடி அந்தப் பகுதியை அரக்கை வைத்து வடி வமைத்து இருப்பார்கள். ஊதும் பகுதியின் உள்ளே ஓர் அங்குல உயரத்துக்கு 'நாகா' என்ற ஒன்று இருக்கும்.
"நாதஸ்வரத்தில் இருக்கும் சீவாளி அல்லது நறுக்கைப் போன்றது நாகா. ஆனால் நாகாவை மாற்ற முடியாது. அதுதான் ஒலியை ஏற்படுத்தும்.
''கூம்பு போல் விரிந்த முனை யைக் கொண்ட எக்காளத்தின் இரண்டாவது பகுதி இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கும் அப்பால் கேட்கும்படி ஒலியை கம்பீரமாக ஒலிக்கச் செய்யும்.
''இப்போது கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயிலில் ஒரு சிலர் ரூ.15,000 விலையில் எக்காளம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். எக்காளம் என்பது அது அமைவதைப் பொறுத்துதான் இருக்கிறது.
''தமிழர்களின் பாரம்பரியத்தில் எக்காளத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதைப்போல ராஜகம்பீர ஒலியை வேறு எந்தக் கருவியும் ஏற்படுத்தாது. எனது முக்காலமும் எக்காலமும் எக்காளத்தோடுதான் நகர்கிறது.
''என் உயிர்மூச்சு பிரியும் வரை என் எக்காளம் ஒலிக்கும். நான் மறைந்தாலும் எனது எக்காள ஒலி எங்கேயாவது எதிரொலித்துக் கொண்டே இருக்கும்,'' என்று திரு கலியபெருமாள் கூறினார்.
எக்காளத்தை ஊதிக் காட்டி னார். அதன் கம்பீர ஒலியைக் கேட்டு என் ஐம்பொறிகளும் அதிர்ந்தன.

