செய்திக்கொத்து

3 mins read

கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்: விவசாயச் சங்கத்தினர் எச்சரிக்கை

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். குறிப்பாகக் கோவையில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்காவிட்டால் இரு மாநில எல்லையில் லாரிகளை மறித்துப் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார். "இந்தக் கடத்தலுக்கு சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அனுமதியை மீறியும் அனுமதி இல்லாமலும் கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, நில அதிர்வுகள் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது," என்றார் பழனிசாமி.

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்

சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரனான சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அண்மைக்காலமாக காங்கிரசின் அணுகுமுறை, கொள்கைகளில் இருந்து தமது கொள்கைகள் மாறுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "இனியும் காங்கிரசில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி உள்ளேன். நான் பாஜகவில் இணைவேனா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்," என சி.ஆர்.கேசவன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு கையால் தட்டச்சு செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி மாணவி

மதுரை: மாற்றுத்திறனாளி மாணவி முருகேஸ்வரி என்பவர் ஒரு கையால் தட்டச்சு செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். வறுமை நிலையிலும் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், பல இடங்களில் வேலை வாய்ப்பு தேடிச் சென்றபோது தாம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். "இதனால் ஒரு தனியார் தட்டச்சு நிறுவனத்தில் சேர்ந்து கடுமையாகப் பயிற்சி செய்து இப்போது தட்டச்சு தேர் விலும் பங்கேற்றுள்ளேன். எனக்கு நண்பர்கள் பெரிதும் உதவினர்," என்றும் முருகேஸ்வரி கூறியுள்ளார்.

17 வயதுச் சிறுவன் கொலை:

குண்டர் சட்டத்தில் நால்வர் கைது

சென்னை: 17 வயதுச் சிறுவனை வெட்டிக்கொன்ற நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின்போது இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அதில் 17 வயதுச் சிறுவன் வெட்டிக்கொல்லப்பட்டான். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 22 முதல் 24 வயதுக் குட்பட்ட நான்கு இளையர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

திருக்குறளை ஒப்புவித்தால்

100 ரூபாய் பெட்ரோல் இலவசம்

நெல்லை: திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு பொதுமக்களைக் கவர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகமும் அங்குள்ள பெட்ரோல் நிலைய நிர்வாகமும் இணைந்து திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியை அறிவித்துள்ளன. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 30 திருக்குறள்களை ஒப்புவித்தால் ரூ.50க்கும் 50 திருக்குறள்களை ஒப்பு வித்தால் ரூ.100க்கும் இலவச பெட்ரோல் வழங்கப்படும். இதையடுத்து போட்டியை அறிவித்துள்ள பெட்ரோல் நிலையத்துக்குப் பொதுமக்கள் படையெடுத்துள்ளனர். ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். (படம்: தமிழக ஊடகம்)