புதுடெல்லி: பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள இருந்த தமிழ்நாடு ஆடவர் உள்பட இருவர் டெல்லி காவல்துறையிடம் சிக்கினர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இது தொடர்பாக கடந்த 14ஆம் தேதி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியி்ல் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இரு ஆடவர்களை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பிடிபட்ட இருவரில் ஒருவரது பெயர் அப்துல்லா என்பதும் 26 வயதான அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மற்றொருவர் மகாராஷ்டிராவைச் சேர்்ந்த காலித் முபாரக் கான் (21 வயது) என்பது உறுதியானது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இவ்விருவரையும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு மூளைச் சலவை செய்துள்ளனர் என்றும் இறுதிக்கட்டமாக பாகிஸ்தானுக்கு நேரடியாக சென்று ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் டெல்லி காவல்துறை கூறியது.
"நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த இருவரும் திட்டமிட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கி, பத்துத் தோட்டாக்கள், ஒரு கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயுதச் சட்டத்தின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது," என காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

