ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளும் மூக்குத்திகளும் விநியோகிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
வீடுகள்தோறும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா மூவாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் குக்கர், கைக்கடிகாரம், வேட்டி, சேலை, வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல்வேறு இலவசப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பாக அகல் விளக்கு, வெள்ளித்தட்டு, பட்டுச்சேலைகள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை வாக்காளர்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ள அறப்போர் இயக்கத்தினர், இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
வாக்காளர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்து தினமும் 500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

