தூத்துக்குடி: அருவியில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளையரை நேரில் பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அந்த இளையரை தனது கார் ஓட்டுநராக நியமித்துள்ளார்.
விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான விஜயகுமார் (படம்) என்ற இளையர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளுடன் குற்றாலத்துக்குச் சென்றிருந்தார் விஜயகுமார். அப்போது கேரளாவைச் சேர்ந்த ஹரிணி என்ற குழந்தை தனது குடும்பத்தாருடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஹரிணி பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. இதைக் கவனித்த விஜயகுமார், சற்றும் தாமதிக்காமல் தாம் இருந்த பெரிய பாறையில் இருந்து கீழே குதித்து, குழந்தையை மீட்டுள்ளார். ஆபத்தான பாறைகளின் மீது ஏறிச் சென்று குழந்தையை மீட்டு வந்த அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
இந்தச் சம்பவத்தை கைப்
பேசியில் படம்பிடித்த சிலர், பின்னர் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். அந்தக் காணொளியைப் பார்த்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உடனடியாக விஜயகுமாரை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
அசச்சமயம் வாகனம் ஓட்டும் உரிமம் இருந்தும் தமக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கவில்லை என்றும் தமக்கு உதவுமாறும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார் விஜயகுமார். இதையடுத்து ஆட்சியர் செந்தில்ராஜ் தனது வாகன ஓட்டுநராக விஜயகுமாரை நியமித்துள்ளார்.
மேலும் தமது செலவிலேயே விஜயகுமாருக்கான சீருடை, காலணிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆட்சியருக்கும் சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.