ராமேசுவரம்: கடந்த 109 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த பாம்பன் ரயில் பாலம் இனி நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, பெரும் புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் தாக்குப்பிடித்த பாம்பன் பாலம் இனி பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு வலுவிழந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கடந்த 1913ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது பாம்பன் பாலம்.
முன்னதாக, 1902ஆம் ஆண்டு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. இதற்குத் தேவைப்பட்ட அனைத்து வகையான கட்டுமானப் பொருள்களும் இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அங்கிருந்து சிறு கப்பல்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன.
நடுக்கடலில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து வழிவிடும் வகையில் தூக்குப் பாலத்துடன் கூடிய 'டபுள் லீப் கேண்டிலீவர்' வகை பாலம் அமைக்கப்பட்டது.
பாலத்தை வடிவமைத்த ஜெர்மானியரான பொறியியலாளர் ஷெர்ஜர் என்பவரின் பெயரால் அப்பாலம் அழைக்கப்பட்டு வந்தது. 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. அதே நாளில்தான் தனுஷ்கோடி, இலங்கையின் தலைமன்னார் நகரங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்கியது.
பாம்பன் பாலத்தை கட்டமைத்த ஆங்கிலேய பொறியாளர்கள் அப்போது நூறு ஆண்டு உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர். அதையும் கடந்து 109 ஆண்டுகள் இயங்கி வந்துள்ளது அப்பாலம்.
பாலம் அமைந்துள்ள பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அதிர்வுகள், சென்சார் கருவி விடுத்த எச்சரிக்கை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இனிமேலும் ரயில் போக்குவரத்துக்கு அப்பாலத்தைப் பயன்படுத்தினால் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இதையடுத்தே அப்பாலத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுக்கும் முடிவை இந்தியன் ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.
பல காலகட்டங்களில் விபத்து, புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாம்பன் பாலம் மூடப்பட்டிருக்கிறது. கொரோனா நெருக்கடியின் போதுதான் நீண்ட காலம் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
இனி, அப்பாலத்தில் ரயில்கள் அறவே செல்லாது என்ற அறிவிப்பு ராமநாதபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

