மு.க.ஸ்டாலின்: பதாகைகள் வேண்டாம்
சென்னை: தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் என்பதும் இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காப்பாற்று வோம் என்பதும்தான் தமது பிறந்தநாள் செய்தி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவினர் தமது பிறந்தநாளுக்காக சாலைகளில் பதாகைகள் வைப்பதோ, அலங்காரங்கள் செய்வதோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1ஆம் தேதி எழுபதாவது பிறந்தநாளாகும்.
டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அமைச்சர் பதவியை ஏற்றதை அடுத்து, முதன்முறையாக டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். அங்கு அவர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் அப்போது தமிழகத்தில் பல்வேறு அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படு கிறது. மேலும், பிரதமர் மோடியையும் அவர் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: மிதிவண்டிக்கு தனிப்பாதை
சென்னை: போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு வசதியாக தனிப்பாதையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மிதிவண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கு உரிய வசதி செய்துகொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் அதிகரித் துள்ளன. மிதிவண்டி பகிர்தல் திட்டம், மிதிவண்டிகளை நிறுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்துவது ஆகியவை குறித்து பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நெதர்லாந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.

