ஈரோடு: வாக்குவாதங்கள், மறியல் போராட்டத்துக்கு மத்தியில் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்குப்பதிவு நடந்தேறி உள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு மத்தியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில இடங்களில் அரசியல் கட்சியினருக்கு இடையே வாக்குவாதங்கள் மூண்டன.
பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். அதேபோல், அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு மிக அருகில் வாக்குகள் சேகரித்ததாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.
மேலும், சில வாக்குச்சாவடிகளில் கட்சித்துண்டுகளுடன் சில கட்சி நிர்வாகிகள் வலம் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க மூன்று மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக வாக்களிக்க காத்திருந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்ததால் மற்ற வாக்காளர்கள் கோபமடைந்தனர். வேண்டும் என்றே தாமதத்தை ஏற்படுத்தி தங்களை வாக்களிக்கவிடாமல் செய்ததாக அந்த வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.

