மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் 13 வயதேயான எட்டாம் வகுப்பு மாணவர்களான வெற்றி, விஜய், சஃபீக் ஆகிய மூவரும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாக ஓடியது.
பின்னர், சாலைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சர்வீஸ் சாலையில் பாய்ந்த அந்தக் கார், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.
இதில் மூன்று மாணவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மற்ற மாணவர்கள் சிதறி ஓடினர். விபத்து குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு விபத்துப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ரத்த வெள்ளத்தில் குழந்தைகள் பலியாகிக் கிடப்பதைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கொள்கலன் லாரி மீது கார் மோதிய விபத்தில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

