தஞ்சை: கல்லணைக் கால்வாயில் மூன்றாம் கட்ட புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியோடு இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே புனரமைப்புப் பணிகளை அதற்குள் முடித்துவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் கல் லணையில் இருந்து பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதி வரை 148 கிலோ மீட்டர் தொலைவுக்கு கல்லணைக் கால்வாய் செல்கிறது. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட உடைப்பு, விரிசல்கள் காரணமாக கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்வதில்லை என்றும் உரிய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று கல்லணைக் கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இதற்கு நிதியுதவி செய்கிறது.
திட்டப் பணிக்காக ரூ.2,639.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

