"எனக்கான இலக்குகளை நானே நிர்ணயித்துக்கொள்கிறேன்"
சென்னை: தமக்கு யாரும் இலக்குகளை நிர்ணயிப்பதில்லை என்றும் தமக்குத் தாமே இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், 'ஏற்றமிகு ஏழு' என்று குறிப்பிடப்படும் ஏழு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு, முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் பலருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும், மாநகராட்சி, நக ராட்சிப் பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசுப்பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை, ரூ.1,136 கோடியில் பல்வேறு மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மைப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினரை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் முதல்வர் நேற்று அறிவித்தார்.
"குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
"தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன் முக்கியத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
"மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் உள்ள 'நான் முதல்வன் திட்டம்' தமிழக மாணவர்கள், இளையர்களை கல்வி, சிந்தனைத் திறனில் முன்னேற்ற கொண்டுவரப்பட்ட திட்டம்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
'நான் முதல்வர் திட்டம்' மூலம் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 17 லட்சத்திற்கு அதிகமான திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தாம் அறிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், தமக்கான இலக்குகளை நிர்ணயிப்பதுடன் அவற்றை அடைவதற்காக எந்நாளும் உழைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

