செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

கீழடி அகழ் வைப்பகம்: மார்ச் 5ஆம் தேதி திறந்து வைக்கும் முதல்வர்

விழுப்புரம்: கீழடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய 'அகழ் வைப்பகம்' எதிர்வரும் ஐந்தாம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தியவை என அறிவிக்கப்பட்டு்ள்ளன. அவற்றில் முக்கியமான பல பொருள்கள் இந்த அகழ் வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு

சென்னை: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதையடுத்து அத்திட்டம் ரூ.1,555 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இந்நிதியைக் கொண்டு 2022-23ஆம் ஆண்டில் 2,544 சிற்றூர்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளைக் கண்காணிக்க மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 18 துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகிறார். சென்னையில் நடைபெற உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார் என்றும் கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்துக்கு முதன்முறையாக வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே. முதல்வர் பிறந்தநாள் கூட்டத்தில் மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.