தமிழகத்தில் கோடை மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில், தமிழகத்தில் மாா்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றார்.
கடல் நீர் மட்டத்தைப் பொறுத்தவரை கடலூர், விசாகப்பட்டினம், சென்னையில் வெவ்வேறு விதமாக உயர்ந்து வருவதாலும் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருவதாலும் வெப்பநிலை அதிகரிப்பு நிலவுவதாக தெரிவித்தார்.
"பொதுவாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களை நாம் குளிர்காலங்களாக கருதுவோம். ஆனால் தற்போது, கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது. கோடை காலத்தில் கோடை மழை பெய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது.
"நிகழாண்டில் இந்த மாதங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை ஒட்டியே இருக்கும். மேலும் தரை, கடல் காற்று இடைவெளி ஏற்படும்போது கோடை மழை பெய்யும்," என்றார் பாலச்சந்திரன்.
இதற்கிடையே, கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தர்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு, இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
பல்வேறு இடங்களில் தள்ளுவண்டிகள், கடைகளில் வைத்து இவற்றை விற்கும் வியாபாரிகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அதேசமயம், வரும் நாள்களில் முந்தைய ஆண்டுகளைவிட இவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

