ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இலங்கை, இந்திய பக்தர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர். இம்முறை 2,408 பேர் தமிழகத்தில் இருந்து அங்கு சென்றனர்.
இந்த ஆண்டு ஆலயத் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை நேற்று முன்தினம் மாலை ஆலயக்கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப் தாஸ் ஜெபரத்தினம், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முறை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாகவும் இவர்கள் அனைவருக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்பட்டதாகவும் கச்சத்தீவு செல்லும் பக்தர்களின் படகுகளை ராமநாதபுரம் ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின்னர் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைந்தது.