சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றியானது, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எவ்வளவு முயன்றாலும் திமுக கூட்டணியில் ஒருபோதும் பிளவு ஏற்படுத்த முடியாது என்றார்.
"பொதுவுடைமை இயக்கத்துக்கும் திமுகவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. நட்பு காரணமாக ஒரே அணியாகச் செயல்படுகிறோம். இந்த அணியானது, ஜனநாயகம் காக்க எப்போதும் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் மட்டும் இவ்வாறு வெற்றி பெற்றால் போதாது என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் மதவாத, வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால்தான் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்திய அவர், இளையர்களுக்கு இது தொடர்பாக கொள்கை ரீதியில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்.
"ஒற்றுமை கைகள் சேராமல் வெற்றிக் கனியைக் பறிக்க முடியாது. சில தரப்பினர் கலவரத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். அதை அனுமதிக்கக் கூடாது. மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது," என்றார் முதல்வர்.

