சென்னை: ஐந்து நிமிடங்களுக்குள் 197 உலக நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் கண்டு, தெளிவாகச் சொல்லும் மூன்று வயது தமிழகச் சிறுவனின் பெயர் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரத், சசிரேகா தம்பதியினரின் மகனான தர்ஷன் என்ற அச்சிறுவன், அண்மையில் நடைபெற்ற உலகச் சாதனை நிகழ்வின்போது 4.40 நிமிடங்களில் 197 நாடுகளின் தேசிய கொடிகளைச் சரியாக அடையாளம் கண்டு, பார்வையாளர்களை அசர வைத்தான்.
இதற்கு முன்பு, இந்தியாவைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் உலக நாடுகளின் கொடிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் அடையாளம் கண்டு படைத்திருந்த சாதனையை, தற்போது தர்ஷன் முறியடித்துள்ளதாக அவனது பெற்றோர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள அனைத்துலகச் சாதனைப் புத்தக குழு தங்கள் மகனின் சாதனையைப் பாராட்டி சான்றிதழும் பதக்கமும் வழங்கி உள்ளதாக சசிரேகா தெரிவித்தார்.
"விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் அழைத்து தர்ஷனுக்கு வாழ்த்து தெரிவித்தார். என் மகன் உலகச் சாதனையை முறியடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
"பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளின் திறமைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களை உரிய வகையில் ஊக்குவிக்க வேண்டும்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சசிரேகா.

