மதுரை: மதுபுட்டிகளுடன் இருசக்கர வாகனங்களில் வலம்வந்து மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று இளையர்கள், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நூதனத் தண்டனை விதித்துள்ளது.
அண்மையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் சில இளையர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பான காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இளையர்கள் சாலையில் மது அருந்தியபடியே வாகனங்களில் சென்றது, பொதுமக்கள் கண்டித்த போதும் அதைக் கண்டுகொள்ளாதது, ஒழுங்கீனமாகச் செயல்பட்டது எனப் பல்வேறு காட்சிகள் அந்தக் காணொளிப் பதிவுகளில் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், மூன்று இளையர்கள் பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
பின்விளைவுகள் குறித்து யோசிக்காமல் தவறு செய்துவிட்டதாகவும் முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரியிருந்தனர். ஊடகங்களில் தங்களைப் பற்றிய செய்திகள் வெளியாகி, அதன் மூலம் பிரபலமடைய நினைத்து தவறு செய்துவிட்டதாகவும் இளையர்கள் குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, மூன்று இளையர்களும் அடுத்தடுத்த நான்கு வாரங்களில் சனிக்கிழமைகள்தோறும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி உத்தரவிட்டார்.

