வேலூர்: சிறைக்கைதிகளின் திறமையை மேம்படுத்தி அவர்களது வாழ்க்கையிலும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் வகையில், தமிழகச் சிறைகளில் புதிதாக கணினிப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைதிகளுக்கு 100 விழுக்காடு அளவுக்கு முழுமை யான தொழிற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வேலூர் ஆப்காவில் தென்னிந்திய சிறை அதிகாரிகளுக்கான ஐந்து நாள் கலந்துரையாடல் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அதில் பங்கேற்ற டிஜிபி அமரேஷ் புஜாரி பேசியபோது, "அதிகாரிகள் தங்களது பதவிகளை மறந்து கலந்துரையாடலில் பங்கேற்பது முக்கியம்.
"சிறைச்சாலை என்பது ஒரு பயத்தைத் தூண்டும் இடமாக அல்லாமல், கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமாகவும் மாறவேண்டும்," என்று கூறிய அவர், இதற்கேற்ப சிறைவாசிகைளச் சீர்திருத்தி, அவர்களையும் சமூகத்தில் ஒருவராக அங்கீ கரிக்க உதவவேண்டும் என்றார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட நாடு களில் சிறப்பாகச் செயல்படுத்தப் படுகின்றன. இதேபோல் தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் வாழ்க்கையும் மேம்பட வேண்டும் என்று டிஜிபி அமரேஷ் புஜாரி வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களி டம் அவர் பேசியபோது, ''சிறைவாசிகளின் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறைகளில் கழிவறைகளின் தரைக்கற்கள் தரமாக சீரமைக்கப்பட உள்ளன.
"மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சிறையிலும் கணினி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இங்கு மூன்று அல்லது ஆறு மாத காலம் பயிற்சி மேற் கொள்ளும் கைதிகள், வெளியே சென்றபின் தனியாக கணினி மையத்தைத் தொடங்கி தங்கள் வாழ்க்கையை மேம் படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
"அத்துடன், சிறைச்சாலைகளில் தொழிற்பயிற்சிகளைத் திறன்பட கற்றுக்கொள்ளவும் கைதிகள் தயாராக உள்ளனர்.சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக நிற்கின்ற அவர்களது திறமைகளையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
சிறைவாசிகள் புத்தகங்களை அதிகம் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.இதற்காக ஒரு லட்சம் புத்தகங்களை இதுவரை பல்வேறு தரப்பினரும் இலவசமாக அளித் துள்ளனர். சிறைச்சாலையில் விளையாட்டுப் பயிற்சியும் இசைக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு விரைவில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு சிறைச்சாலை யிலும் பூங்காக்களை அமைக்க வும் மூலிகைச் செடிகளைப் பராமரிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் கைதிகளின் மனநிலை மாறும். அவர்கள் மீண்டும் குற்ற வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க மாட்டார்கள்,'' என்றும் அமரேஷ் புஜாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

