மின் வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரு பெண், ஓர் ஆண் யானை என மொத்தம் மூன்று யானைகள் உயிரிழந்தன. இதையடுத்து, இந்த மின்வேலியை அமைத்திருந்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன், 50, என்ற விவசாயியை பாலக்கோடு காவலர்கள் கைது செய்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் அருகில் சுற்றி வந்த இரு குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவலர் மீது ரவுடி துப்பாக்கிச்சூடு
கோவை: கோவையில் ரவுடி மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை மாறி, காவலர் மீது ரவுடி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். ஆயுத வழக்கு தொடர்பில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, காவலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் கோவை மாவட்டம், காட்டுமடம் பகுதியில் பரபரப்பு நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்திய கைதி சஞ்சய் ராஜாவை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கைதியிடம் இருந்த கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்வதற்காக காவலர்கள் சென்றபோது, சஞ்சய் ராஜா தனது துப்பாக்கியால் காவலரை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் முட்டியில் காயம் அடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமும் மதுக்கடையைச் சுத்தம் செய்யும்படி விநோத உத்தரவு
திருநெல்வேலி: நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவருக்கு தினமும் இரவு 12 மணி அளவில் டாஸ்மாக் மதுக்கடையைச் சுத்தம் செய்யும்படி நூதன தண்டனை விதித்து பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம், 28. இவர், கடந்த மாதம் 12ஆம் தேதி அதே பகுதியில் மதுபோதையுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தை மோதித் தள்ளினார். இந்த விபத்தில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீர்காத்தலிங்கம் பிணை கோரி இரண்டாவது முறையாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நீர்காத்தலிங்கத்துக்கு தினமும் நள்ளிரவு 12 மணி அளவில் நெல்லை டவுன் அருகே உள்ள குறுக்குத்துறை மதுபானக் கடையைச் சுத்தம் செய்யவும் மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறையைப் பின்பற்றவும் அதனைக் காவலர்கள் கண்காணித்து வரவும் நீதிபதி உத்தரவிட்டார்.


