தருமபுரி: மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாடப் பொருள்களை அடித்து உடைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது.
தேர்வு முடிந்ததைக் கொண்டாடும் விதத்தில் அங்கிருந்த மாணவர்கள் வகுப்பறையில் இருந்த உட்காரும் பெஞ்ச், மின்விசிறி போன்ற தளவாடங்களை உடைக்கத் தொடங்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமையாசிரியர் மாணவர்களைக் கண்டித்தார். அத்துடன் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறையைக் காட்டினார்.
வகுப்பறையில் உடைந்த பொருள்களைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம். அது அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். இனி இதுபோல் நடக்காமல் நாங்கள் கண்டிக்கிறோம் என்று உறுதிமொழி கூறி தங்கள் பிள்ளைகளைக் கண்டித்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் வகுப்பறையில் இருந்த ஒரு மாணவன் மற்றவர்கள் உடைக்கும்போது எடுத்த காணொளியை வலைத்
தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனைத்தொடர்ந்து விளக்கம் அளித்த தலைமையாசிரியர், "மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்பந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்," என்று பதிவிட்டுள்ளார்.

