கருத்துக் கேட்பு கூட்டத்தில் இந்து அமைப்பினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருநெல்வேலி: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் கருத்துகளைக் கேட்க மேடையில் அமர்ந்திருந்தனர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் இந்துக் கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினரும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு இந்து அமைப்பினருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கைகலப்பு ஏற்படும் அளவுக்கு அனைவரும் மேடை அருகில் நின்று கூச்சல் போட்டனர். இதையடுத்து இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் கடவுள் படம் மாட்டப்பட்டது.
இதற்கிடையில் கூச்சல் குழப்பம் காரணமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் பாதியில் முடித்துக் கொள்வதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துகளை அஞ்சல் வழி இந்து அறநிலையத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறிவித்தார். அதையடுத்து அனைவரும் தங்களது கருத்துகளை அதற்கு உரிய படிவத்தில் எழுதி அதனை குழுவினரிடம் ஒப்படைத்தனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது, அதற்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்து முதன்முதலாக நெல்லை, தூத்துக்குடி மண்டலத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கலந்துகொண்டவர்களிடம் எழுத்து வடிவில் கருத்துகள் பெறப்பட்டுள்ளது, தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.

