சென்னை: தமிழ்நாடு அரசு அனுப்பிய இணையச் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டாவது முறையாகத் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக மக்களுக்கு எதிராக அவர் செயல்படுவதாக ஒரு சில தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இணைய ரம்மி தடை சட்ட மசோதாவில் மேலும் சில திருத் தங்களைச் செய்யவேண்டிய தேவை உள்ளதால் மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இணைய ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்களில் இதுவரை 44 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்தச் சூதாட்டத்தால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் அதிகம் பாதிக்கப்படுவதால் இணைய ரம்மி விளையாட்டை தடைசெய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால், அதற்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வந்த ஆளுநர், கடந்த நவம்பர் மாதம் சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்துக்கு 24 மணி நேரத்தில் அரசு விளக்கம் அளித்தது.
எனினும், நான்கு மாதங்கள் 11 நாள்களாக மசோதாமீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினர்.
இருப்பினும், அவர் எந்த முடிவும் எடுக்காமல் புதன்கிழமை மாலை திடீரென மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய தாகவும் இணையச் சூதாட்டத்தைத் தடை செய்ய சட்டமியற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இணையச் சூதாட்டத்தால் உயிர்கள் பலியாகிக் கொண்டி ருக்கும் நிலையில், சூதாட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து உரையாடும் ஆளுநர், மக்களின் உயிரோடு விளையாடு வதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சட்ட நிபுணர்களுடன் கலந்தா லோசித்து நீதிமன்றத்தை அரசு நாடவேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சரவையில் விவாதம்
இதனிடையே, நேற்று மாலை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த இணையச் சூதாட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கைகள், சட்டபூா்வ நடவடிக்கைகள் குறித் தும் கூட்டத்தில் ஆலோசிக்கப் படும் எனத் தகவல்கள் கூறின.

