கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் 25,000 ஏக்கர் வேளாண் நிலங்களைக் கையகப் படுத்த முயன்று வருகிறது.
இதற்கு அரசியல் கட்சியினரும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணியைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் பாதுகாப்பு வழங்குவதற்காக 7,000 காவலர்கள் குவிக்கப்பட்டி ருந்தனர்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 95 பேரைக் காவலர்கள் கைது செய்தனர்.
பல்வேறு இடங்களிலும் கடை கள் அடைக்கப்பட்டிருந்தாலும் சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
காவலர்களின் பாதுகாப்புடன் 100 விழுக்காடு அரசுப் பேருந்துகளும் 50 விழுக்காடு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டதாகவும் அங்கு இயல்பு நிலை நிலவு வதாகவும் தகவல்கள் கூறின.
இதனிடையே, "மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பது தேமுதிகதான். மக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களைக் கையகப் படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும்.
"இவ்விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், தற்போது 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25,000 ஏக்கர் நிலங்களைக் கையகப் படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் கரி வெட்டி, கத்தாழை, வளைய மாதேவி, வடக்கு வெள்ளூர், அம்மேரி, மும்முடிச்சோழன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து என்எல்சி, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்டோரை கண்டித்து 'மக்களை ஏமாற்றாதே' என்ற சுவரொட்டிகளைக் கிராமங்கள் முழுவதும் ஒட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்தச் சுவரொட்டிகளில் ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் வழங்கவேண்டும், கல்வித் தகுதிக்கேற்ப நிரந்தர வேலை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

