கவனம் தேவை என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்து
சென்னை: தமிழகத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பால் (இன்ஃபுளு யன்சா) இளையர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி்னார்.
பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியைச் சேர்ந்த 27 வயது இளையர் அண்மையில் கோவாவுக்கு சுற்றுலா சென்று திரும்பியதாகவும் கடந்த 9ஆம் தேதி ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இத்தகைய அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளையர் ஒருவார சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
"இதையடுத்து அவருடன் கோவா சென்று திரும்பிய நால்வரும் இளையரின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்," என்றார் அமைச்சர்.
உயிரிழந்த இளையருக்கு வேறு இணைநோய்கள் இருந்தனவா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், பாதிப்பைக் கண்டறிய நோயாளிகளின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
புதிய வகை கிருமித்தொற்று பரவுகிறதா என்பதைக் கண்டறிய, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு நடைபெறுவதாக செல்வவிநாயகம் தெரிவித்தார்.

