காஞ்சிபுரம்: கூகல் செயலி மூலம் லஞ்சம் பெற்ற காஞ்சிபுரம் காவல்துறையினர் இருவர் கைதாகி உள்ளனர்.
அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில், காருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளம் காதல் ஜோடியை மிரட்டி அவர்கள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது.
அண்மையில் படப்பை பகுதியில் காவலர்கள் மணிபாரதி, அமிர்தராஜ் ஆகிய இருவரும் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி கண்ணில்பட, இருவரையும் விசாரித்துள்ளனர்.
தங்களுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று தெரிவித்த பிறகும் விடாத இரு காவலர்களும் லஞ்சம் தரக்கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது.
இல்லையெனில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறியதால் காதலர்கள் பதறிப்போயினர்.
இருவரும் தங்களிடம் ரொக்கப்பணம் இல்லை என்று கூறவே, 'கூகல் பே' செயலி மூலம் ரூ.4,000 அனுப்புமாறு வற்புறுத்தி உள்ளனர்.
வேறு வழியின்றி பணத்தை அனுப்பிய பின்னர், காவல்துறை உயரதிகாரிகளிடம் காதல் ஜோடி புகார் அளிக்க, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.