சென்னை: கோடை காலம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மின்தேவை இதுவரை இல்லாத அளவுக்கு 17,647 மெகாவாட் ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
எதிர்வரும் நாள்களில் மின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக மே மாதம்் புதிய உச்சத்தை எட்டக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் மொத்த மின்நுகர்வோர் எண்ணிக்கை ஏறத்தாழ 2.67 கோடியாகும். தற்போது அன்றாட மின் தேவை என்பது சுமார் 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில், விவசாயத்துக்கு 2,500 மெகாவாட் ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் மின்விசிறி, குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து மாநிலத்தின் அன்றாட மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைக் கடந்துவிட்டது.
விவசாயத்துக்காக தமிழக அரசு கூடுதலாக 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளதால் கூடுதலாக 727 மெகாவாட் தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றாட மின் தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்துவிட்டது. கடந்த 2022 ஏப்ரல் 29ஆம் தேதி தமிழக மின் பயன்பாடு 17,563 மெகாவாட் என்ற அளவை எட்டியிருந்தது.
எனவே அடுத்து வரும் நாள்களில் அன்றாட மின்தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

