வடமாநிலப் பெண்ணுக்கு தன் செலவில் வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்த தமிழக செங்கல் சூளை உரிமையாளர்

வடமாநிலப் பெண்ணுக்கு தன் செலவில் வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்த தமிழக செங்கல் சூளை உரிமையாளர்

2 mins read
8e1c7cdc-52ae-43f2-81b7-f6a82191d10c
-

சென்னை: தனது செங்­கல் சூளை­யில் பணி­யாற்றி வரும் வட­மா­நில இளம் பெண்­ணுக்கு தனது செல­வில் வளை­காப்பு விழா நடத்­தி­யுள்­ளார் அச்­சூ­ளை­யின் உரி­மை­யா­ளர் பாலமுருகன்.

கறி விருந்து, ஆட்­டம் பாட்­டத்­து­டன் நடை­பெற்ற இந்­நி­கழ்­வின் முடி­வில் அவ­ருக்கு தொழி­லா­ளர்­கள் நெகிழ்­வு­டன் நன்றி தெரி­வித்­த­னர்.

தென்­காசி பகு­தி­யில் உள்ள செங்­கல் சூளை­களில் நூற்­றுக்­கணக்­கான வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். கடை­யம் அருகே வடக்கு மடத்­தூர் கிரா­மத்­தில் பால­மு­ரு­கன் என்­ப­வ­ரது செங்­கல் சூளை­யில் கோல்­கத்­தா­வைச் சேர்ந்த ஏழு குடும்­பத்­தி­னர் தங்­கி­யி­ருந்து வேலை பார்க்­கின்­ற­னர்.

இவர்­களில் பொறி, தோனி­யம்மாள் ஆகிய இரு­வ­ரும் காத­லித்து மணம் புரிந்­துள்­ள­னர்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இவர்­க­ளின் திரு­ம­ணம் நடை­பெற்­றது. தற்­போது தோனி­யம்மாள் ஏழு மாத கர்ப்­பி­ணி­யாக உள்­ளார்.

தனது மனை­விக்கு வளை­காப்பு விழா நடத்த வேண்­டும் என்­பது கண­வர் பொறி­யின் விருப்­ப­மாக இருந்­தது. எனி­னும், சொந்த ஊர் சென்று திரும்ப நிறைய செல­வா­கும் என்­ப­தால் யோசித்­துள்­ளார்.

மேலும், தமி­ழ­கத்­தில் வட­மா­நி­லத்­த­வர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக வதந்­தி­கள் வெளி­யா­கும் நிலை­யில் சொந்த ஊர் சென்­றால் அந்த வதந்­தியை நம்­பி­யது போல் ஆகி­வி­டும் என்ற தயக்­க­மும் இருந்­துள்­ளது.

இது­கு­றித்து அறிந்த சூளை உரி­மை­யா­ளர் பால­மு­ரு­கன் தோனி­யம்­மாளுக்கு தனது செல­வில் வளை­காப்பு விழாவை நடத்­து­வது என முடிவு செய்­தார்.

தென்­கா­சி­யில் உள்ள பொறி, தோனி­யம்­மாள் ஆகி­யோ­ரின் உற­வி­னர்­களை மட்­டும் அழைக்­க­லாம் என்று அவர் தெரி­வித்த யோச­னையை பொறி­யும் ஏற்­றுக் கொண்­டார்.

இரு தினங்­க­ளுக்கு முன் தோனி­யம்­மா­ளின் வளை­காப்பு விழா சிறப்­பாக நடை­பெற்­றது. கறி விருந்­து­டன் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் அவ­ரது உற­வி­னர்­கள் பலர் கலந்­து­கொண்டு ஆட்­டம் பாட்­டத்­து­டன் கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.