சென்னை: பிரதமர் மோடி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா வீழ்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபர் அதானியின் பங்குச் சந்தை ஊழலுக்கு மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் துணை போவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.அழகிரி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, தற்போது இரண்டு விழுக்காடு குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
"கர்நாடக மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தாம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் காங்கிரஸ் கட்சி தமக்கு கல்லறை தோண்டுகிறது என்றும் கூறியுள்ளளார்.
"இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி வெளிநாட்டில் தரக்குறைவாகப் பேசிவருவதாகவும் பிரதமர் கூறுகிறார். இவ்விரு குற்றச்சாட்டுகளுமே உண்மைக்குப் புறம்பானவை.
"இந்தியாவில் எந்த வளர்ச்சியை பாஜக கொண்டு வந்திருக்கிறது? அதானிதான் வளர்ந்துகொண்டே இருக்கிறார். இந்தியா வீழ்ந்து கொண்டிருக்கிறது," என்றார் கே.எஸ். அழகிரி.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் பெற்றுத் தருவதாக பிரதமர் கூறியது நிறைவேறவில்லை என்றும் விளை பொருள்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருவதாகவும் அழகிரி சாடினார்.
பிரதமர் இவ்வாறு தவறான தகவல்களைக் கூறுவது சட்டப்படி குற்றம் என்றும் பிரதமர் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி மேலும் குற்றம் சாட்டினார்.

