செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

மாநாடு நடத்த உதவும் நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரல்

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உதவும் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சிக்காகவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 2024ஆம் ஆண்டு ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது என்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் செயல்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. முதலீட்டா ளர்கள் மாநாட்டுக்கான புத்தாக்க வடிவமைப்பு, இணையத் தள உருவாக்கம், மேலாண்மை, தகவல் தொடர்பு ஆகிய வற்றுக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்ய ஒப்பந்த அறிவிப்பை வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கும்பக்கரை காட்டுப்பகுதியில் மூண்ட காட்டுத்தீயை அணைக்க தீவிர முயற்சி

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலையின் கும்பக்கரை காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை மூண்ட காட்டுத் தீயை அணைக்க காட்டு வளத்துறையினர் தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாகப் பரவியது என்றும் நூறு ஏக்கருக்கும் மேலான பகுதிகளில் இருந்த அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் எரிந்து போனதாகவும் கூறப்படுகிறது. தீயணைப்புப் பணியில் இருபது பேர் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி அரங்குக்கு 'அனிதா நினைவு அரங்கம்' என பெயர் சூட்டப்படும்

சென்னை: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்குக்கு மறைந்த மருத்துவ மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் மாணவி அனிதா. "நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக, அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத் திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என பெயர் சூட்டப் படும்," என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கீழடியைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

புதுடெல்லி: தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல்துறைக்கு வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அருகாட்சியக கட்டு மானப் பணிக்காக சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். "அருங்காட்சியகப் பணிகளை வேகமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகள் குறித்து ஒரே தளத்தின் மூலம் விவரங்களைத் தெரிந்துகொள்ள மின்னிலக்க கல்வெட்டு அருங்காட்சியம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது," என அமைச்சர் கிஷன் ரெட்டி மேலும் கூறியுள்ளார். கீழடியைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது பல்வேறு அரிய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

பணத்துக்காக வீட்டு உரிமையாளரைக் கொன்ற இளம் பெண்

சென்னை: தரமணி பகுதியில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்மணியைக் கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 56 வயதான சாந்தகுமாரி என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டின் மாடியில் ஸ்ரீஜா என்ற 20 வயது பெண் குடியிருந்தார். இந்நிலையில், தன் வீட்டை வேறு ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் கொடுக்க முடிவு செய்த சாந்தகுமாரி, அதற்காக ரூ.3.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதையறிந்த ஸ்ரீஜா, நேற்று முன்தினம் அந்தப் பணத்தை திருட முயன்றபோது சாந்தகுமாரி பார்த்துவிட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சாந்தகுமாரியைக் கீழே தள்ளிவிட்டதாகவும் அதில் தலையில் அடிபட்டு அவர் இறந்துவிட்டதாகவும் ஸ்ரீஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.