60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை
சென்னை: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது லட்சக்கணக்கில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 60 இடங்களில், 12 அரசுத்துறை அலுவலகங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அரசு அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்கள், பீரோக்கள், கோப்புகள் வைக்கப்படுள்ள அறைகளில் லஞ்சமாகப் பெறப்பட்ட ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் சார்பதிவாளர் அலுவலகங்களைக் குறிவைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சேலம், ஈரோடு மாவட்டங்களில் போக்குவரத்துத் துறை சார்ந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடியிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியிலும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மதியம்் சுமார் மூன்று மணி முதல் இரவுவரை சோதனை நீடித்தது என்றும், வீடு கட்டுவதற்கு வரைபடம் தயார் செய்து மாநகராட்சியில் அனுமதி பெற்றுத் தரும் நான்கு தனியார் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் குவிந்து சோதனை நடத்தினர்.
செய்யாறு சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளிப்புறக் கதவைப் பூட்டி விட்டு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பொதுமக்களில் ஒருவர் லஞ்சம் கொடுப்பதற்காக தங்க நாணயத்துடன் வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்தனர். மதுரையில் சில அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், இடைத்தரகர்களிடம் இருந்துதான் அதிக அளவிலான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது அதிகரித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் புகார்கள் எழுப்பியதை அடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல் போக்குவரத்து உள்ளிட்ட பன்னிரெண்டு அரசுத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
பணப்புழக்கம் அதிகமாக உள்ள வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை (ஆர்டிஓ அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் அலுவலகங்களைக் குறிவைத்து அதிரடி சோதனை நடந்துள்ளது.
இந்த அலுவலகங்களில் அன்றாடம் பல்வேறு காரணங்களுக்காகப் பெறப்படும் லஞ்சத் தொகை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகே கைமாறும் என்றும் கூறப்படுவதால், அந்தச் சமயத்தில் சோதனை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று முன்தினம் நடந்த இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

