திண்டுக்கல்: கொடைக்கானல் காட்டுப் பகுதியில் மூண்டுள்ள காட்டுத் தீ காரணமாக அங்கு பெரும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயை அணைப்பதற்கு காட்டுவளத்துறையினர் போராடி வருவதாகவும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் அதிக வெப்ப நிலை பதிவாகி வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள சில காட்டுப் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் சருகு இலைகளில் தீப்பிடித்து, அது காட்டுத் தீயாக மாறி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மூண்டுள்ள காட்டுத் தீ காரணமாக காட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலங்களும் கருகி வருகின்றன.
செண்பகனூர் காட்டுப் பகுதியில் மூண்டுள்ள தீயால் அங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகளும் தீயின் கோரக்கரங்களில் சிக்கி நாசமாகிவிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், தீயின் கடுமை தாங்காமல் காட்டு விலங்குகள் இடம் மாறும் அபாயமும் நிலவுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நவீன முறையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே காட்டுத் தீயால் கொடைக்கானல் பகுதியை புகை சூழ்ந்துள்ளது. பெரும் புகை மண்டலம் காரணமாக அ|ங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்ககப்பட்டுள்ளது என்றும் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கொடைக்கானல் செண்பகனூர் காட்டுப் பகுதியில் கடந்த இரு தினங்களாக பல ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத் தீ எரிந்து வருகிறது.
பொதுமக்களில் சிலர் மூச்சு விடுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், குழந்தைகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

