நாமக்கல்: தமிழகத்தில் 'கூகல் பே' கைப்பேசி செயலி மூலம் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்தச் செயலி மூலம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பிரிவு துணை இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த தாதியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர்.
எனினும் தற்போது பணிபுரியும் இடத்தில் இருந்து அவர்களை விடுவிக்க துணை இயக்குநர் பிரபாகரனும் அவரது அலுவலகத்தில் உடன் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் முத்துமணி ஆகிய இருவரும் ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். மேலும், முன்னாள் அதிகாரி ஒருவரும் லஞ்சம் பெற உதவியுள்ளார்.
மூவர் கூட்டணி லஞ்சப் பணத்தை 'கூகல் பே' சேவை மூலம் பெற்றது தெரியவந்துள்ளது. இரு தவணைகளாக இந்த லஞ்சம் அளிக்கப்பட்டதாக தாதியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு லஞ்சம் கொடுத்த தாதியரை மட்டும் அரசு உத்தரவுக்கேற்ப உடனடியாக பணியில் இருந்து விடுவித்து, இடமாறுதல் உத்தரவை நிறைவேற்றிய பிரபாகரன், மற்ற தாதியரை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தாதியர் சிலர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

