மதுரை: சளிக்காய்ச்சல் (இன்புளுயன்சா) பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் மருத்துவமனையின் வெளி நோயாளிகள், காய்ச்சல் பிரிவுக்கு 300 பேர் வரை வந்து செல்வதாகவும் வார இறுதி நாள்களில் கூடுதலாக 70 பேர் வரை வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
நான்கு நாள்களுக்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சா பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, அங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 25 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே தமிழகத்தில் பரவி வரும் புதிய கிருமித்தொற்று காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
"இதுபோன்ற தகவல்களைப் பரப்பி மக்களைப் பதற்றப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவுபடுத்தினார்.

