பெண்களை மிரட்டி ஆபாச காணொளி எடுத்த பாதிரியாருக்கு வலைவீச்சு
குமரி: வழிபாட்டுத் தலத்துக்கு வரும் பெண்களுடன் பழகி, ஆபாச படமெடுத்த மதபோதகருக்கு காவல்துறை வலைவீசி உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் மத போதகராகப் பணியாற்றி வந்த 27 வயதான அந்த பாதிரியார், அங்கு வரும் பெண்களிடம் அன்பாகப் பேசி தன் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அவர்களை கைப்பேசி காணொளி வசதி மூலம் தொடர்புகொண்டு பேசி, அவர் களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் காணொளிகளைப் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அந்தக் காணொளிகளைக் காட்டி, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் இந்தக் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பாதிரியார் தலைமறைவாகி உள்ளார்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில் மறுதேர்வு
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். தேர்வு எழுத இயலாமல் போனவர்கள், தேர்வில் தோல்வி அடைந்தவர்களுடன் சேர்ந்து மறுதேர்வை எழுதலாம் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். இம்முறை பனிரெண்டாம் வகுப்புக்கான மொழித்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என செய்தி வெளியானதை அடுத்து லியோனி இவ்வாறு கூறியுள்ளார்.
திருச்சி சிவா: மனச்சோர்வில் உள்ளேன்
திருச்சி: எதையும் பேசக்கூடிய மனநிலையில் தாம் இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். தாம் மனச்சோர்வில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களுக்கும் சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. திருச்சியில் உள்ள சிவாவின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அமைச்சரின் ஆதரவாளர்கள் நான்கு பேர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளதாகவும் அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தியதில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சிவா.
'மக்கள் சேவையாற்றுவதில் மகிழ்ச்சி'
சென்னை: அரசியலைப் பொறுத்தவரை தமக்கு எப்போதுமே நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருந்து வந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுக்குச் சேவையாற்றுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். "சினிமாவில் நான் பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே சினிமாவை விட்டு விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது," என்றும் உதயநிதி மேலும் கூறியுள்ளார்.

